Archives: பிப்ரவரி 2017

இருளில் ஒரு நமுட்டுச் சிரிப்பு

வாஷிங்டன் போஸ்ட் (Washington Post) பத்திரிக்கையில், பீட்டர் தையிலே (Peter Thiele) மற்றும் பிற தொழில்நுட்ப வல்லுநர்கள் மனித வாழ்வை காலவரையின்றி நீடிக்கச் செய்யும் முயற்சிகளைக் குறித்து, “தொழில்நுட்ப ஜாம்பவான்களின் சமீபத்திய திட்டப்பணி: மரணத்தை மீறிடு” என்ற தலைப்பில் ஆரியானா சா (Ariana Cha) ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இந்த திட்டப்பணிக்காக பல கோடிகளைச் செலவழிக்க அவர்கள் தயாராக இருந்தனர்.

ஆனால், அவர்கள் சற்று காலதாமதமாக வந்து விட்டனர். ஏனென்றால் மரணம் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டுவிட்டது. “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்,” என்று இயேசு கூறியுள்ளார் (யோவா. 11:25-26). தன் மீது விசுவாசம் வைக்கிற எவனும் ஒருபோதும், எச்சூழ்நிலைமையிலும் சாகவே சாவதில்லை என்று இயேசு உறுதியளிக்கிறார்.

ஆனால் ஒன்றை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதாவது நம்முடைய சரீரங்கள் மரித்துப்போகும். அதைக்குறித்து நாம் ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் “நான்” என்று நாம் கூறும் நம்முடைய சுயம், அதாவது சிந்தித்தல், பகுத்தறிதல், நினைவுகூறுதல், நேசித்தல் போன்ற சாகச பகுதி ஒருபோதும் சாகவே சாவதில்லை.

மேலும் இதன் சிறப்பு என்னவெனில், இது நமக்கு இலவசமாகக் கொடுக்கப்படுகிற ஒரு ஈவு. நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று, இயேசு நமக்களிக்கும் இரட்சிப்பை நாம் பெறுவதே. இவ்வன்பளிப்பைக் குறித்து ஆழ்ந்து சிந்திக்கும்பொழுது, இவ்வளவு பெரிய காரியத்திற்கு இவ்வளவு எளிமையானதொரு பதிலா என்கிற உணர்வு ஏற்படுகிறது என்று சி. எஸ். லூயிஸ் தெரிவிக்கிறார். ஆகவே அதை “இருட்டில் ஒரு நமுட்டுச்சிரிப்பு” போல என விவரிக்கிறார்.

சிலர் இதைக்குறித்து, “இது மிகவும் எளிமையாக உள்ளதே,” என்கின்றனர். நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன், நீங்கள் பிறப்பதற்கு முன்பே தேவன் உங்களை நேசித்து நீங்கள் என்றென்றும் அவரோடே வாழ வேண்டும் என்று அவர் விரும்பும்பொழுது, எதற்காக அவ்வழியை கடினமாக அமைத்திடுவார்?

கண்களால் காண முடியாத மோதிரம்

கிரேக்க தத்துவஞானியாகிய பிளாட்டோ (கி.மு. 427 - கி.மு. 348) மனித இருதயத்தின் இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட ஓர் கற்பனை வழியை கையாண்டார். பூமியின் ஆழத்திலே நன்கு புதைந்து மறைந்து கிடந்த ஒரு தங்க மோதிரத்தை எதேச்சையாக கண்டுபிடித்த மேய்ப்பனைப் பற்றிய ஒரு கற்பனைக் கதையை கூறினார். ஒரு நாள் ஓர் பயங்கர நிலநடுக்கம் பழங்கால மலைக்கல்லறை ஒன்றை பிளந்து அந்த மோதிரத்தை அம்மேய்ப்பனுக்கு வெளிப்டுத்தியது. அதுமட்டுமன்றி, அந்த மோதிரத்திற்கு மந்திர சக்தி உள்ளதையும் அதை அணிபவர் மற்றவர் கண்களுக்கு தெரியாவண்ணம் மாயமாய் மறைந்து போக முடியும் என்பதையும் எதேச்சையாக அம்மேய்ப்பன் அறிந்துகொண்டான். மாயமாய் மறைந்து போவதைக் குறித்து எண்ணும் பொழுது பிளாட்டோ ஒரு கேள்வி எழுப்பினார். அதாவது மனிதர்கள் தாங்கள் பிடிபட்டு, தங்கள் தவறுகளுக்காக தண்டனை அனுபவிக்கக் கூடும் என்கிற கவலை அவர்களுக்கு இல்லாதிருந்தால், தீமை செய்ய அவர்கள் தயங்குவார்களா என்பதே கேள்வி.

யோவான் சுவிசேஷத்திலே இக்கருத்தை இயேசு வேறொரு கோணத்தில் சொல்வதை நாம் காணலாம். நல்ல மேய்ப்பன் என அழைக்கப்படும் இயேசு, தங்களுடைய செயல்கள் வெளியரங்கமாகிவிடாதபடி தங்களுடைய இருதயங்களை இருளின் போர்வைக்குள் மறைத்துக்கொண்டிருப்பவர்களைக் குறித்துப் பேசுகிறார் (யோவா. 3:19-20). தங்களுடைய தவறுகளை மூடி மறைத்து வைக்க நினைப்பதை சுட்டிக்காட்டி நம்மை குற்றப்படுத்த அவர் விரும்பவில்லை, மாறாக அவர் மூலமாக அவர் அளிக்கும் இரட்சிப்பை பெற்றுக்கொண்டு, அவரின் வெளிச்சத்திற்குள் நம்மை அழைக்கிறார் (வச. 17). நம்முடைய இருதயங்களின் மேய்ப்பவராகிய அவர் மனுஷ இருதயங்களில் உள்ள மிக மோசமான காரியங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதின் மூலம் தேவன் நம்மீது எவ்வளவாய் அன்புகூர்ந்துள்ளார் என்பதையும் வெளிப்படுத்துகிறார் (வச. 16).

தேவன் தம்முடைய இரக்கத்தின் ஐஸ்வரியத்தினாலே இருளில் இருக்கும் நம்மை ஒளியிலே அவரைப் பின்பற்றி நடக்க அழைக்கிறார்.

முழுமையாய் நெருங்கிச் சேருதல்

சில வருடங்களுக்கு முன்பு, ஒரு கால்ஃப் (Golf) போட்டியைக் காணும்படி என்னுடைய நண்பர் என்னையும் தன்னோடு அழைத்துச் சென்றார். முதல் முறை என்பதால் அங்கு எதை எதிர்பார்ப்பது என்று கூடத் தெரியவில்லை. அங்கு வந்து சேர்ந்த பொழுது, சில பரிசுப்பொருட்கள், தகவல் அட்டை, கால்ஃப் மைதான வரைபடம் ஆகியவற்றை கொடுத்த பொழுது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவ்விளையாட்டின் 18வது நிலையில், முக்கிய பிரமுகர்கள் கண்டுகளிக்கும் கூடாரத்திற்கு அனுமதி கிடைத்தது. அங்கு எங்களுக்கு அமர இருக்கைகளும் இலவச உணவும் கிடைத்தது. நான் தனியாக வந்திருந்தால் இந்தக் கூடாரத்திற்கு வர எனக்கு அனுமதி கிடைத்திருக்காது. ஆனால் இப்பொழுது அது கிட்டியதற்கு காரணம் என் நண்பர். அவர் மூலம் தான் எனக்கு முழுமையான அனுமதி கிட்டியது.

எந்த உதவியுமின்றி நாம் விடப்பட்டிருந்தால், நாம் அனைவரும் பரிதாபத்திற்குரிய நிலையில் தேவனை விட்டு துண்டிக்கப்பட்டே இருந்திருப்போம். ஆனால், நம்முடைய தண்டனையை இயேசு ஏற்றுக்கொண்டதால், அவருடைய ஜீவனையே நமக்களித்து, தாம் தேவனிடம் கிட்டிச்சேர அனுமதி அளித்துள்ளார். “அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாய் இப்பொழுது தெரியவரும்” (எபே. 3:10) என அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியுள்ளார். கிறிஸ்து இயேசுவுக் குள்ளாக யூதனையும், கிரேக்கனையும் ஒன்றாக இணைத்த இந்த ஞானம், நாம் அனைவரும் பிதாவாகிய தேவனை கிட்டிச்சேர வழிவகுத்துள்ளது. “அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது” (வச. 12).

நாம் இயேசுவின் மீது விசுவாசம் வைக்கும் பொழுது, நம்மோடு ஐக்கியம் கொள்ளப் பிரியப்படும் தேவனிடம், அளவற்ற அன்பு செலுத்தும் தேவனிடம் கிட்டிச்சேர உதவும் ஒப்பற்ற நெருக்கத்தை நாம் பெற்றுக்கொள்ளுகிறோம்.

முழு இருதயத்தோடு!

காலேப் ‘முழு இருதயத்தோடு’ ஆண்டவரைச் சேவித்த உத்தமமான மனிதன். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை உளவுபார்த்து மோசேவுக்கும் மக்களுக்கும் அறிக்கை அளிக்கும்படி அனுப்பப்பட்ட 12 பேர் கொண்ட குழுவில் காலேபும், யோசுவாவும் இருந்தனர். “நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக் கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்வோம்” (எண். 13:30) என காலேப் கூறினான். ஆனால் அந்தக் குழுவில் இருந்து 10 பேர் வெற்றிபெற இயலாது என கூறினார்கள். தேவன் அதை அவர்களுக்கு வாக்குப் பண்ணியுள்ளார் என்பதை அறிந்திருந்தும், தடைகளை மாத்திரமே அவர்கள் பார்த்தார்கள் (வச. 31-33).

இந்த 10 பேர் ஜனங்களை நம்பிக்கை இழக்கச்செய்து, தேவனுக்கு எதிராக முறுமுறுக்கச் செய்தார்கள். இதனால் அவர்கள் 40 ஆண்டுகள் வனாந்திரத்திலேயே அலைந்து திரிந்தார்கள். ஆனால் காலேப் தன்னுடைய நம்பிக்கையை இழந்து போகவேயில்லை. “என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் (முழுமனதுடன்) என்னைப் பின்பற்றிவந்தபடியினாலும், அவன் போய்வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்” (14:24) என கர்த்தர் கூறினார். 45 ஆண்டுகள் கழித்து, காலேப் 85 வயதாய் இருக்கும்பொழுது, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய் (முழு இருதயத்தோடு) பின்பற்றினபடியினால்” (யோசு. 14:14) எபிரோன் பட்டணத்தை தனக்கென பெற்றுக்கொண்டான்.

பல நூற்றாண்டுகள் கழித்து, “நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது” என இயேசுவை நோக்கி நியாயப்பிரமாண வல்லுநர் ஒருவர் கேட்ட பொழுது, “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை” (மத். 22:35-38) என இயேசு பதிலளித்தார்.

இன்றும்கூட, நம் முழு இருதயத்தோடு நாம் செலுத்தும் அன்பிற்கும், நம்பிக்கைக்கும், அர்ப்பணிப்பிற்கும் பாத்திரரான தேவன் மீது தான் கொண்ட விசுவாசத்தின் மூலம் காலேப் நமக்கு ஊக்கமளிக்கும் ஒரு எடுத்துக்காட்டாய் இருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

நம்பிக்கையின் வஸ்திரம்

ஒரு பல்கலைக்கழகத்தில் உள்ள ஜவுளி துறை மாணவர்கள், தெற்கு குஜராத்தின் பாரம்பரிய ரோகன் கலையைப் பயன்படுத்தி, ஊக்கமான வாசகங்களைக் கொண்ட டீ-ஷர்ட்களை சுவாரஸ்யமாக வடிவமைத்திருந்தனர். இந்த கலைஞர்கள் எண்ணெய் மற்றும் காய்கறி சாயங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட வண்ணப்பூச்சுகளைப் பயன்படுத்துகின்றனர், மேலும் ஒரு தூரிகை மூலம் அவர்கள் விசித்திரமான வடிவங்களை வரைகிறார்கள். குணமாகுதலைக் கருப்பொருளாகக் கொண்டு, இந்த நவீன டி-ஷர்ட்களின் தொகுப்பு அந்த பண்டைய கலை வடிவத்தைக் குறிப்பாகக் கவலை, மன அழுத்தம் அல்லது மனசிதைவிற்கு உள்ளானவர்களுக்காக பயன்படுத்தினர். அவற்றை அணிந்தவர்கள் தங்கள் நம்பிக்கையின்மைக்கு மத்தியில் நம்பிக்கை பெறுவார்கள் என்றெண்ணினர்.

ஆதாம் மற்றும் ஏவாளின் வீழ்ச்சிக்குப் பிறகு அவர்களது நிர்வாணத்தை மூடி முதலில் உடுத்துவித்ததின் மூலம் அவர்களின் நம்பிக்கையற்ற சூழ்நிலைக்குத் தேவனும் பதிலளித்தார். சர்ப்பத்தினால் தவறாக வழிநடத்தப்பட்ட அவர்கள், தடைசெய்யப்பட்ட பழத்தை புசிக்கத்தக்கதாக கண்டனர் (வ.6). விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தியது. அது அவர்களின் கண்களைத் திறந்து, அவர்களின் பாவத்தை அவர்களுக்கு உணர்த்தியது. பயம், குற்ற உணர்வு மற்றும் அவமானம் போன்ற உணர்வுகளை முதன்முறையாக அனுபவித்ததால், அத்தி இலைகளின் ஆடைகளால் அவர்களின் நிர்வாணத்தை போதுமான அளவு அவர்களால் "மறைக்க" முடியவில்லை (வ.7). எனவே, தேவன் தம் கிருபையால் அவர்கள் அணிவதற்கு "தோல் உடைகளை" உண்டாக்கினார் (வ.21). அவர்களின் உடனடித் தேவையைச் சந்தித்தார்.

தேவன் நம் அனைவருக்கும் என்ன செய்தார் என்பதற்கு இது ஒரு அடையாளம். நம்முடைய பாவம் வெளிப்பட்டபோது, தேவன் கிருபையாக தம்முடைய குமாரனாகிய இயேசுவைத் தம்முடைய “இரட்சிப்பின் வஸ்திரங்களாலும்” அவருடைய “நீதியின் சால்வையை” கொண்டும் (ஏசாயா 61:10) நம்மை மூடிக்கொள்ளும்படி நம்மிடம் அனுப்பினார். பயம், துக்கம், குற்ற உணர்வு, அவமானம் அல்லது சீர்கேடு போன்ற உணர்வுகள் நம்மை ஆட்கொள்ளும்போது, தேவன் நமக்கு ஏற்கனவே செய்ததை நாம் நினைவில் கொள்வோம். அவருடைய தியாகத்தால் நாம் மூடப்பட்டுள்ளோம். எனவே, நாம் அவரில் வஸ்திரம் தரித்து பூரணமாக்கப்பட்டுள்ளோம் என்பதை அறிந்து நம்பிக்கை கொள்ளலாம்.

 

பின் இருக்கையில் வேதாகமங்கள்

ஆண்ட்ரூவின் கார் நிறுத்தப்பட்டது, காவலர்கள் கடந்து வந்தனர். அவர் முன்பு பலமுறை செய்ததுபோல இப்போதும், “தேவனே, நீர் பூமியிலிருந்தபோது குருடர்களைப் பார்க்கச் செய்தீர். இப்போது, தயவு செய்து இந்த பார்வையைக் குருடாக்கும்” என்று ஜெபித்தார். பாதுகாவலர்கள் காரைச் சோதனையிட்டனர், சாமான் பைகளிலிருந்த வேதாகமங்களைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆண்ட்ரூ எல்லையைத் தாண்டி, வேதாகமத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள முடியாதவர்களிடம் அதனை எடுத்துச் சென்றார்.

ஆண்ட்ரூ வான் டெர் பிஜில், அல்லது சகோதரர் ஆண்ட்ரூ. கிறிஸ்தவத்தைச் சட்டவிரோதமாக்கிய நாடுகளுக்கு வேதத்தை எடுத்துச் செல்லவேண்டும் என்ற சாத்தியமற்றது போல் தோன்றிய பணிக்காகத் தேவன் அவரை அழைத்தபோது தேவனின் வல்லமையை நம்பியிருந்தார். “நான் மிகவும் சாதாரணமானவன்” என்று அவர் தனது குறுகிய கல்வியறிவு மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் குறிப்பிட்டார். “நான் செய்ததை, யார் வேண்டுமானாலும் செய்யலாம்” என்றவரது இன்றைய ஸ்தாபனம்தான் ஓபன் டோர்ஸ் இன்டர்நேஷனல், உலகம் முழுவதும் உபாத்திரவப்படும் இயேசுவின் விசுவாசிகளுக்கு ஊழியம் செய்கிறது.

யூதாவின் ஆளுநரான செருபாபேல், யூதர்களின் சிறையிருப்பிற்குப் பின், ஆலயத்தை மீண்டும் கட்டுவது சாத்தியமற்றதாக தோன்றியபோது, அவர் ஊக்கம் இழந்தார். ஆனால் தேவன் மனித பலத்தையோ பராக்கிரமத்தையோ நம்பாமல், தம்முடைய ஆவியின் மீது நம்பிக்கை வைக்கும்படி அவருக்கு நினைவூட்டினார் (சகரியா 4:6). சகரியா தீர்க்கதரிசிக்கு அருகாமையில் உள்ள ஒலிவ மரங்களிலிருந்து எண்ணெய் கொண்டு வரப்பட்ட விளக்குகளின் தரிசனத்தின் மூலம் அவர் அவரை ஊக்கப்படுத்தினார் (வ. 2-3). தொடர்ச்சியான எண்ணெய் விநியோகத்தின் காரணமாக விளக்குகள் எரிவது போல, செருபாபேலும் இஸ்ரவேலர்களும் தேவனின் தொடர்ச்சியான வல்லமையை நம்பி அவருடைய வேலையைச் செய்ய முடியும்.

நாம் தேவனைச் சார்ந்திருக்கும்போது, நாம் அவரை நம்பி, அவர் நாம் செய்யும்படி அழைப்பதைச் செய்வோம். 

 

நம்பிக்கையின்மையிலிருந்து நம்பிக்கைக்கு

மிகவும் சிரமப்பட்டு, மருத்துவ மாணவியான கிருபா, ஒரு கிராமத்தைச் சேர்ந்த சூம்பின விரல்களுடைய ஒரு மூதாட்டியை மருத்துவ முகாமுக்கு வரும்படி சம்மதிக்க வைத்தாள். அங்கு ஒரு மூத்த மருத்துவர் அவளைப் பார்த்து, சில மருந்துகளைக் கொடுத்தனுப்பினார். அவள் பின்னர் கிருபாவைத் தனியாக அழைத்து, “அவர்களுடைய குறைபாடுகள் மிகவும் கடுமையானவை, நாம் ஒன்றும் செய்ய முடியாது. மக்களுக்கு நம்பிக்கையூட்டும் முன் ஏதாவது செய்ய முடியுமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்" என்றார்.

சீரடைவதற்கான நம்பிக்கை மருத்துவத்தில் எப்போதும் இல்லை என்ற கசப்பான உண்மையை கிருபா படித்துக்கொண்டாள். ஆனால் இந்த நம்பிக்கையின்மைக்கு மத்தியிலும் கூட, இயற்கைக்கு அப்பாற்பட்ட தேவகிருபையில் இன்னும் நம்பிக்கை இருக்கிறது.

ஆவிக்குரிய நோயின் நம்பிக்கையற்ற சூழ்நிலையில் இஸ்ரவேல் இருந்தபோது, ஆமோஸ் தீர்க்கதரிசனம் உரைத்தார். நீதிமானை ஒடுக்கி, பரிதானம் வாங்கி, ஏழைகளின் நியாயத்தைப் புரட்டுவதால் இஸ்ரவேல் அழிக்கப்படும் என்றும், ஜனங்கள் சிறைப்பட்டுப்போவார்கள் என்றும் கூறினார் (வ.12). கிமு 722 இல் இஸ்ரவேல் ஜனங்கள் அசீரியாவுக்கு சிறைப்பட்டுப் போனபோது ஆமோஸின் தீர்க்கதரிசனம் நிறைவேறியது (2 இராஜாக்கள் 17:6). இருப்பினும், ஆமோஸ் அழிவை முன்னறிவித்தபோது, அவர் நம்பிக்கையையும் அளித்தார். “கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்” (வ.6) என்றார். எப்படி என்பதை விளக்க, “நீங்கள் தீமையை வெறுத்து நன்மையை விரும்பி, ஒலிமுகவாசலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்” (வ.15) என்றார். அவர்கள் இதைச் செய்தால், அவர்கள் பிழைப்பார்கள், தேவனின் பிரசன்னம் மற்றும் இரக்கத்தை அனுபவிப்பர் என்று ஆமோஸ் கூறினார் (வ.15-16).

ஆமோஸ் இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொல்வது போல், நாமும் தேவனைச் சார்ந்து, அவரைத் தேடி, நன்மை செய்வோம், அதனால் நாமும் அவருடைய நன்மையை அனுபவிப்போம். நாம் அவருக்குக் கீழ்ப்படிந்து நன்மை செய்யும்போது, நம்முடைய மிகவும் நம்பிக்கையற்ற சூழ்நிலைகளைக் கூட அவர் அற்புதமாக மாற்றுவார் (ஆதியாகமம் 50:20). உங்கள் வாழ்க்கையில் என்ன நடந்தாலும், நினைவில் கொள்ளுங்கள்: தேவனில் இன்னும் நம்பிக்கை உண்டு.